Saturday, January 22, 2011

இதில என்னுங்ங் இருக்க்கிது...

ராமாயம்மாள் பிறக்கும் போது, யாரெல்லாம் அறைக்கு வெளியே காத்திருந்தார்கள் என்பது எமக்குத் தெரியாது, ஆனால் என்னென்ன நடந்திருக்கக் கூடும் என்பதை , ஓரளவு யூகிக்க முடியும், அவரது தந்தை கையைக் குறுக்கே கட்டி காத்திருந்திருக்கலாம், அல்லது மாட்டிற்கு பருத்தி ஆட்டிக் கொண்டிருந்திருக்கலாம், நிச்சயம் அவர் உலகிற்கான வருகையை அவரது வீட்டிலே நிகழ்திருப்பார் என்பதை உறுதியாகக் கூறலாம், ராமாயம்மாள் வயது 85 நேற்று காலை சிவபதமடைந்தார், அவர் 85 ஆண்டுகாலம் இப்பூமியில் பயணிக்க பேருதவியாய் இருந்த உடலை எரியூட்ட, ஆத்மா மின்மயானத்தில் காத்திருந்தோர் கிட்டத் தட்ட 150 பேர்,

பிறப்பின் திகதியை மருத்துவர்கள் உத்தேசமாகக் கூறலாம், 6.30 மணிக்கு டைம் அலாட் பண்ணியிருக்கு சார், உடலை எரிக்க ஒதுக்கப்பட்ட சரியான நேரத்தை மின்மயான நிர்வாகி சொன்னபோது, நேரம் 5.30, ஒரு மணி நேர காத்திருப்பு,

ஒரு மணி நேரத்தைச் செலவளிக்க , வளாகத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.எரிவாயு தகன மேடை , மேற்கத்திய பாணிக் கட்டிடங்களுடன் , தியானம் செய்வதற்கான எகிப்த்திய பிரமிட் வடிவ அமைப்புகளுடன், மிகப் பசுமையாக, மிகத் தூயமையாக , காவிரிக் கரையில் இருக்கிறது.

- மாப்பிள்ள இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கிறயா கேட்டார் கார் பழனிசாமி.
- மாமா என்ன அர்த்தத்துல கேட்கறிங்க , நீங்க வில்லங்கம் புடிச்ச ஆளாச்ச்சே என்றேன் நான்.
-அட , வேற யாருக்காவது டாட்டா பை பை சொல்ல வந்திருக்கியானு கேட்டன்ய மாப்ள சிரித்தபடி சொன்னார் கார்.
-இல்லீங்ங் மாமா இதான் மொதொ தடவை, சும்மா ஜம்னு இருக்கு.

ஆமோதித்தபடி தலையை ஆட்டினார், மவுனமாக நடந்தோம், சரிவாக மேலேறிய பாதையில் ஏறி மேலே சென்றோம் , பிரமிட் தியான மண்டபங்கள் பெரிதாக இருந்தன, இரண்டுக்குமாய் 4 வாயில்கள் , எரிவாயு தகனமேடை 1அய் ஒட்டியிருந்த தியான மண்டபத்தில் நுழைந்தோம், உள்ளே மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு, தகன மேடைக்குள் உடலைச் செலுத்துவதை உறவினர்கள் பார்க்கும் விதமாக பெரிய கண்ணாடியால் முன்பகுதி தடுக்கப்பட்டிருந்தது, திரையரங்கில் திரைக்குப் பதிலாக மிகப் பெரிய கண்ணாடி இருந்தால் எப்படி இடுக்கும் அது போல, ஒரு உடல் உள்ளே வெந்து தணிந்து கொண்டிருந்தது, அதைக் காண இயலவண்ணம், தகன அடுப்பு , இரும்புக் கதவால் மூடப்பட்டிருந்தது. உடலை உட்செலுத்துவதைக் காண மட்டுமே காண முடியும்.


ஒரு பெண் குறிப்பேட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார், எரிந்து கொண்டிருக்கும் உடலின் முன்னாள் உறவினர்கள் கீழே காத்துக் கொண்டிருந்தார்கள், ஆகவே அவர்களில் ஒருவராக இருக்க முடியாது, என உள்ளுணர்வு எனக்கு உறுத்தியது.

-ஏனுங்ங்.. நீங்ங்

வார்த்தையை நான் முடிக்கும் முன்பே, கார் சொன்னார் “ இவங்க இங்க தான் வேலை செய்யறாங்க , பேப்பர்ல இவங்க பேட்டி கூட வந்திருந்ததே நீங்ங் பார்க்கலீங்க்ளா மாப்ள “


வாய் நிறையப் புன்னகையுடன் தலை நிமிர்த்தினார் , அந்தப் பெண்-

ஆமாங்க நான் இங்கதான் வேலை செய்யறேன் என்றவர் நாம் மேற்கொண்டு கேள்விகள் எதையும் கேட்கும் முன் அவராக சில தகவலைச் சொல்லத் துவங்கினார். ஒரு வேளை அவரது தினசரிப் பணிகளில், ஆச்சரியக் கேள்விகளுக்கு பதிலளிப்பதும் ஒன்று என்பது போல, மனனம் செய்து ஒப்புவிப்பதைப் போல,

ஆறு மாசம் எங்க வீட்டில இந்த வேலைக்கு போறதுக்கு யாருமே ஒத்துக்கவே இல்லை, நான் தான் விடாப்பிடியா போராடினேன், என் கணவரின் மனசு மாறி அவர் ஒத்த்துக் கொண்டார், ஆனால் என்னோட அம்மா அப்ப ஒத்துக்கவே இல்லை, அவங்களுக்கு என்னை விட என் குழந்தைகளின் எதிர்காலம் பற்ரிய பயம், அம்மா இந்த வேலைக்குப் போறவங்கன்னு தெரிஞ்சா பள்ளிக்கூடத்தில சக குழந்தைகள் மதிப்பாங்களா, கல்யாண வயசு வந்த பின்னாடி , என குழந்தைகளுக்கு கல்யாணம் செய்துவைக்க இந்த வேலை ஒரு தடியாக இருக்குமோ, அப்படினு 1008 பயம், இருந்தாலும் நான் விடாப்பிடியா இருந்தேன், இப்போ வேலைல இருக்கேன், என்றபடி வாய் விட்டுச் சிரித்தார்.

-உங்களுக்கு இது ஆரம்பத்தில எப்படி இருந்துச்சு

” பயமெல்லாம் இல்லை, கூடவே ஆண் பணியாளர்கள் இருக்காங்க, அது போக இப்போவெல்லாம் இது ஒரு புனிதமான தொழில் என்ற எண்ணம் மனசுல ஓடுது, அதனால் பயமெல்லாம் இல்லை,

- உடலை தகன மேடைக்குள் செலுத்தும் போது எதோ பாட்டுப் போடுவீங்களாமே,


” ஆமாங்க, போடட்டுமா, கேட்கறீங்களா, இல்லை சி டி வேண்டுமென்றாலும் ஆஃபிசில் கெடைக்கும் வாங்கிக்குங்க

- இல்லை, இப்போ வேண்டாம் கீழே இருக்கிற பாடியை உள்ளே செலுத்தும் போது போடுங்க

“ அந்தப் பாட்டுப் போடுவது பெரிய விடயம் இல்லை, ஆனால் அதன் கருத்தை நீங்கள் கேட்கணும்னா, யாரும் பேசாம இருக்கணும், செல் போன் சைலண்ட்ல போடுங்க,

- உங்களுக்கு சம்பளம் எப்புடிங்க பீஸ் ரேட்டுங்ங்களா என்று ஒரு கேள்வியைப் போட்டார் கார்

” ஏனுங்ங் நீங்ங் என்ன பனியன் கம்பனியா வெச்சுருக்கீங்ங், பீஸ் ரேட் கணக்குள சம்பளம் பேசுறீங்ங்,,,அதெல்லாம் இல்லீங் எனக்கு சம்பளம் 3,500 ரூ மாசத்துக்கு அவ்ளோதாங்க,என்னோட தங்கச்சியும் இதே இதுல ஆஃபிஸ்ல வேலை செய்யுதுங்ங் என்றார்.

ஒரு பேட்டியாக இந்த உரையாடலை வளர்த்தெடுக்கலாம் என நினைத்த போது, அவரது சக ஆண் பணியாளர் வந்தார்,

ஏம்மா, இதுல[ தற்போது உடல் எரிந்து கொண்டிருக்கும் தகன மேடை ] ஸ்ப்ரிங் கட்டாயிருச்சு, பாடி ட்ராலியை உள்ளே செலுத்தவோ வெளியே எடுக்கவோ முடியாது, என்ன செய்யலாம், என்றார்

2 வத பத்த வையுங்க, மெக்கானிக்கிற்கு சொல்லிவிடுங்க, இன்னிக்குப் பரவாயில்லை, இதான் லாஸ்ட், நாளைக்கு கேஸ்கள் அதிகமானால், சிக்கலாகிடும் என்று அவரிடம் சொன்னவர், சிரித்த படியே இருங்க வரேன் என எங்களிடம் சொல்லி தகன மேடை அறைக்குள் சென்றார்.

நாங்கள் அந்த பிரமிட் வடிவ தியான அறையை நோட்டமிட்டோம், மரணம் பிரிவு குறித்த வாசகங்கள் கற்பலகைகளில் செதுக்கப்பட்டு பதிக்கப்பெற்றிருந்தன,

-தேனுங்க்ங் மாமா இதெல்லாம் படிச்சா, சம்பாதிக்கிர ஆசயெல்லாம் வராதில்ல ,

- என்ன மாப்ப்ள , அதுக்காக இப்புடியே சாலியா சாலாக்கு மயிரப் பண்ணிக்கிட்டு இருக்கலாம் பாக்குறீங்ங்களாக்கும், பொண்ண குடுத்திருக்கோமய்யா, நல்லா காப்பாத்தற வழியப் பாருங்க என்றார் கார் ,


6. 30 உடல் தகன மேடைக்குக் கொண்டு செல்லப்பட்டது , உறவினர்கள் அனைவரும் தியான மண்டப கண்ணாடிக்குப் பின் அமர்ந்திருந்தன்ர், , தீ சுவாலைக்குள் உடலை ட்ராலியில் வைத்துத் தள்ளும் முன் , அப்ப் பெண் பக்கவாட்டில் சுவரில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்,


பாசம் தேடிய கண்கள் எங்கே
நேசம் நாடிய கரங்கள் எங்கே
தேசம் உலாவிய கால்கள் எங்கே
தீயுண்டதின்றென்று சாம்பல் இங்கே


மனதை உலுக்கும் ராகத்தில் மெல்லியதாய் ஒரு பெண் குரல் கசிந்துருகத் துவங்கியது , ஆழ்ந்த மவுனம் ,

மாண்டவர் புண்ணியம் எம்முடன் சேர்க ,
மாண்டவர் புண்ணியம் எம்முடன் சேர்க,
மாண்ண்ண்டவர்ர்ர்ர்ர் புண்ண்ண்ணியம்ம்ம் எம்ம்ம்முடன் சேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க....

5 நிமிடப் பாடல் முடிவில் ராமாயம்மாளை தீ உண்று, அவருடனான கடைசி பவுதீக உரையாடலை முடித்து வைத்ததை கண்னீரோடு ஏற்றுக் கொண்டு, வெளியே வந்தோம்.

இன்னும் முக்கால் மணிநேரம் ஆகும் சாம்பலை அஸ்திக் கலசத்தில் போட்டுத் தருவாங்க, வெளிய இருக்கலாம் வாங்க என்று கூட்டமும் வெளியேறியது.காவிரி மலை நேர மயக்கத்தில் , ஆழத்தில் ஓடிக் கொண்டிருந்தது.


முக்கால் மணிநேரம் கழித்து , யாருங்க ராமயம்மாள் வாரிசு , இங்கே வாங்க என்று குரல் கொடுத்தபடியே , வெளியே வந்தார் அப்பெண், கையில் தூய கதர் துணியில் சுற்றிக் கட்டப்பட்டு, அஸ்திக் கலசத்தின் மேலே

ராமாயம்மாள் , வயது 85 ,வாரிசுதாரரின் முகவரி என விலாசம் எழுதப்பட்டு சீட்டு ஒட்டப்பட்டிருந்தது, இது தான் இனி ராமாயம்மாள் .

“ வாங்க ஆஃபிசில் கையெழுத்துப்போட்டு , கலசத்தை வாங்கிக்குங்க ” என்றபடி முன்னே சென்றார்.


நானும் ராமாயம்மாளின் வாரிசும், இன்னும் சில உறவினர்களும் பின்னே சென்றோம் .அலுவலகத்தில் கையெழுத்திட்டு கலசத்தைப் பெற்றுக் கொண்ட அவரது மகன் “ எங்ங்கம்மா ஒரு கலசத்தில அடங்கிருச்சு “ என்றார் வேதனை தளும்பிய இதழ் சிரிப்போடு.

எல்லோரும் அவரவர் நாற் சக்கர ஊர்திகளை நோக்கி நகரத் துவங்கினோ. அப்பெண் அலுவலக வாசலில் நின்றிருந்தார்,

- ஏனுங்ங், சாம்பல் இவ்ளோதான் ஆவுங்களா என்றேன் நான்

“இல்லீங்.. அது ஆவுங்ங் நெரைய, ஆனால் எல்லாரும் 1 அல்லது 2 கலசம் தான் கேப்பாங்க. அதனால அவ்ளோதான் கொடுப்போமுங்க...

- மிச்ச சாம்பலை என்ன செய்வீங்க என்றேன் நான்.

“ குப்பையில் கொட்டிருவோமுங்க, வேற வழி இல்லிங் டிஸ்போஸ் செய்ய” என்றார் அவர்.

என்ன சொல்வதெனத் தெரியவில்லை, “ சரி வரோமுங்ங்ங்” என்று சொல்லி அவரிடம் இருந்து விடை பெற்றார் கார் பழனிச்சாமி.

சிரித்தபடி “சரிங்ங்ங்” என்றார் அப்பெண். வாழ்க்கையை நோக்கி சிரிக்கக் கற்றுக் கொண்ட அவர் வியப்பேயளித்தார்.

மயனாத்துக்கு வந்து அங்குள்ளவரிடம் மீண்டும் வருகிறோம் என சொல்லும் தைரியம் எனக்கில்லாததால், மவுனமாக தலையசைத்து விடை பெற்றேன் நான்.

நாவிதன் குரல் காற்றில் கேட்டது “ ஆத்தா சாமியாட்டாங்க, சாமியை காவிரி ஆத்துல கரைக்கோணும் , எலோரும் ஆத்துக்கு வாங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்”

***********************************

இது ஒரு உண்மைச் சம்பவம்